Articles
Swaraj India National Steering Committee Member K. Balakrishnan’s article in Tamil: Towards Alternative in Agricultural Domain

Swaraj India National Steering Committee Member K. Balakrishnan’s article in Tamil: Towards Alternative in Agricultural Domain

விவசாய அரங்கத்தில் மாற்றத்தை நோக்கி

விவசாயிகளின் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் அகில இந்திய மட்டத்தில் எழுப்பவும், சிறு சிறு விவசாய சங்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், அவைகளின் கோரிக்கைகளை, குரல்களை இந்திய அளவில் வெளிப்படுத்தவும், பேராசிரியர் யோகேந்திர யாதவ் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே வாழ்க விவசாயி இயக்கமாகும். இது வழக்கமான பாணியில் தனிநபர்களை முன்னிலைப்படுத்தாமலும், தங்கள் பின்னால் பிற அமைப்புகள் வரவேண்டும் என்ற முனைப்புள்ள அமைப்பாக இல்லாமலும், ஒரு மாறுபட்ட அமைப்பாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்திற்கான அமைப்பாகவும் விளங்கும். சுயஆட்சி இயக்கத்தின் விவசாயப் பிரிவாக இயங்கும் வாழ்க விவசாயி இயக்கத்தின் தற்போதைய அகில இந்திய ஒருங்கிணைப்பாளராக பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தோழர் அவிக்சாகாவும், தமிழக ஒருங்கிணைப்பாளராக தோழர் K.பாலகிருஷ்ணனும் பணியாற்றுகின்றனர்

வாழ்க விவசாயி இயக்கத்தின் சாதனைகள்
ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் வாழ்க விவசாயி இயக்கம், அகில இந்திய மட்டத்தில் பல அளப்பரிய சாதனைகளைச் சாதித்திருக்கிறது. வறட்சி பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில் விவசாயிகளைப் புறக்கணித்த மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, 2015 டிசம்பரில் சுயஆட்சி இயக்கத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து, 2016 மே மாதத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை விவசாயிகளுக்கு சாதகமாகப் பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2016 ஜுலை 1லும், 2017 ஜுலை 1லும் ‘இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகள்’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

 

 

விவசாயிகளின் பேரெழுச்சி காலம்:

தமிழகத்தில் வாழ்க விவசாயி இயக்கத்தின் யாத்ரா
தமிழக விவசாயிகள் டில்லியில் 2017ல் போராடியபோது, பிரதமர் மோடியும், அரசு இயந்திரமும் அவர்களைப் புறக்கணித்தன. போராடிய விவசாயிகளைச் சந்தித்து வாழ்க விவசாயி இயக்கத்தின் தலைவர் தோழர் யோகேந்திர யாதவ், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கவும், அவர்கள் பிரச்சினைகளை நேரடியாக அறியவும் ‘யாத்ரா’ வருவதாக உறுதி அளித்தார். தமிழகப் பிரச்சினைகள் குறிப்பாக விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாக நடந்த காவிரி டெல்டா பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நடைபெற்றது இந்த யாத்திரை. 2017 மே 3 முதல் 7 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரையில் ஏராளமான சிறு சிறு விவசாய சங்கங்களைச் சந்திக்க முடிந்தது. இது அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

AIKSCCயின் உருவாக்கம்
2017ல் விவசாயிகளின் போராட்டங்கள் தனித்தனியாக, மாநிலந்தழுவிய போராட்டங்களாக எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருந்தன. அவற்றின் உச்சகட்டமாக ஜுன் 6ல் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசினால், பா.ஜ.க. விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், நியாயமான கொள்முதல் விலைக்காகப் போராடும்போது, 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய அளவில் விவசாயிகளை அணிதிரட்ட வேண்டிய தேவையின் அடிப்படையில், அகில இந்திய அளவில் இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) உருவாக்கப்பட்டது. இதை உருவாக்குவதில் வாழ்க விவசாயி இயக்கத்தின் தலைவர் தோழர் யோகேந்திர யாதவ் முக்கிய பங்காற்றினார். தமிழகத்தில் வாழ்க விவசாயி இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் K.பாலகிருஷ்ணன் முன்முயற்சியில் இந்த ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் போராட்டம்
AIKSCCயினுள் வாழ்க விவசாயி இயக்கத்தின் ஊக்கமான செயல்பாடு மற்றும் AIKSCCயின் தொடர் இயக்கங்களின் விளைவாக, கடன் நிவாரணம் மற்றும் கட்டுபடியான விலை குறித்த மசோதாக்கள் தனிநபர் மசோதாக்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. இந்த மசோதாக்களுக்கு பாராளுமன்றத்தில் 21 கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. இது விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்கு, தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியாகும்.

MSP சத்தியாக்கிரகா
பிரதமரும், நிதி மந்திரியும் நிதி நிலை அறிக்கையின்போது MSP விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறினார்கள். அக்கூற்றின் உண்மைத்தன்மையை மக்கள் முன் விளக்கவும், விவசாயிகளிடம் விளைபொருட்கள் என்ன விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது என்பதை அறியவும், MSP குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறவும், வாழ்க விவசாயி இயக்கத்தின் முன்முயற்சியில், பல விவசாய சங்கங்கள் இணைந்து மண்டி பிரச்சார இயக்கம் எனப்படும் MSP சத்தியாகிரகா இயக்கத்தை நடத்தியது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை எந்தவொரு மண்டியிலும் கொடுக்கப்படவில்லை என்பதும் மற்றும் விவசாயிகள் மண்டிகளில் எவ்வாறு வியாபாரிகளிடமிருந்தும் அரசு அதிகாரிகளிடமிருந்தும் பிரச்சனைகள சந்திக்கின்றனர் என்பதையும் யோகேந்திரயாதவ் பத்திரிக்கையாளர்களிடம் மார்ச் 24ல் விளக்கி அறிக்கையாக வெளியிட்டார். மறுநாளே பிரதமர் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்று வானொலியில் உறுதியளித்தார். இவ்வாறு தேசிய அளவில் பிரதமர் மீண்டும் தலையீடு செய்து பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது வாழ்க விவசாயி இயக்கத்திற்கு கிடைத்த இன்னுமொரு வெற்றியாகும்.

MSP Alert – குறைந்தபட்ச ஆதார விலை எச்சரிக்கை
ஏப்ரல் 2ம் தேதி முதல் வாழ்க விவசாயி இயக்கம், MSP Alert – குறைந்தபட்ச ஆதார விலை எச்சரிக்கை என்ற செயல்பாட்டைத் துவக்கிஉள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மண்டியிலும் விவசாயிகளின் என்னென்ன விளைபொருட்கள் என்னென்ன விலைக்கு வாங்கப்படுகின்றன என்பதும், விவசாயிகள் எந்த அளவுக்கு கொள்ளையடிக்கப்படுகிறார்கள் என்பதும் வாழ்க விவசாயி இயக்கத்தால் தினசரி அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படுகிறது. இது விவசாயிகள் எந்த அளவுக்கு மண்டியில் கொள்ளையடிக்கப்படுகிறார்கள் என்பதை நாடு முழுவதுமுள்ள விவசாய முன்னணிகள், ஊடகங்கள் நகரமக்கள் புரிந்து கொண்டு எதிர்வினையாற்ற ஏதுவாக இருக்கும்.

100 நாள் வேலை திட்டத்தில்; உடனடி ஊதியம்
கிராமப்புற மக்கள் 100 நாள் வேலை திட்டத்தின்படி (MGNREGA) பணி செய்து, சுமார் ஓர் ஆண்டாகியும் ஊதியம் கிடைக்கப்பெறாமல் இருந்தனர். மத்திய மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொண்டு தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்தன. சுயஆட்சி இயக்கம் மூலமாக, வாழ்க விவசாயி இயக்கம் உச்சநீதி மன்றத்தில் இது குறித்து வழக்கைத் தொடுத்தது. இதனை விசாரித்த உச்சநீதி மன்றம், பணி முடித்த 14 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற தீர்ப்பினை 2018 மே 18 அன்று வழங்கியுள்ளது. இது கிராமப்புற கூலி விவசாய மக்களுக்கான வாழ்க விவசாயி இயக்கத்தின் சாதனையாகும்.

தமிழகத்தில் வாழ்க விவசாயி இயக்கம்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், விவசாய இயக்கங்களை ஒருங்கிணைப்பதிலும் தமிழகத்திலும் தற்பொழுது ஒரு புதிய உத்வேகமான செயல்பாடு நடைபெற ஆரம்பத்திருக்கிறது. வாழ்க விவசாயி இயக்கத்தைப் பொறுத்தவரை, விவசாய இயக்கங்களை ஒருங்கிணைப்பதை தனது முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையில்தான் வழக்கறிஞர் குருசாமியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தமிழக விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழுவாக இருந்தாலும் சரி, கமல்ஹாசனால் வழி நடத்தப்படும் மக்கள் நீதி மையக் கட்சியும், சில விவசாய சங்கங்களும் இணைந்து நடத்திய காவிரி நீருக்கான நிரந்தர தீர்வு குறித்த அனைத்து விவசாயிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, வாழ்க விவசாயி இயக்கம் அவற்றில் பங்கேற்றது. தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும்.

அதிகாரத்தை நோக்கிய விவசாயிகளின் பயணம்:
இதுவரையிலும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, விவசாயிகளும் விவசாய சங்கங்களும் ஆதரவளித்து ஏமாந்துள்ளனர். இனியும் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுப்பதும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக, அகில இந்திய அளவிலே கொண்டு செல்வதும் மட்டுமே விவசாயிகளுக்கான நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும். அதை ஏற்படுத்தவேண்டுமானால் விவசாயிகள் தங்கள் கைகளில் அதிகாரத்தைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அதை நோக்கிய இலட்சிய பயணத்தை மேற்கொள்ளுவதற்கு, குறுகிய காலத்தில் அகில இந்திய அளவில் ஒரு முத்திரையைப் பதித்த வாழ்க விவசாயி இயக்கம் உடன் நிற்கும்.

Photo Credit: Sharada Balasubramanian



AUTHOR: K. Balakrishnan

National Steering Committee Member of Swaraj India

The author’s views are personal.